கன்னியாஸ்திரி திருச்சி கோர்ட்டில் ஆஜர்

கன்னியாஸ்திரி திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.

Update: 2022-12-08 20:32 GMT

கன்னியாஸ்திரி பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்திரியாக இருந்தார். இவர், திருச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் தங்கி இசை பயிற்சி பெற்று வந்தார். அப்போது, திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் கர்ப்பமான தன்னை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்ததாகவும், மேலும் 3 பாதிரியார்கள் தன்னை மிரட்டியதாகவும் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், பாதிரியார் ராஜரத்தினம் மற்றும் கன்னியாஸ்திரியை மிரட்டியதாக புகார் கூறப்பட்ட பாதிரியார்கள் 3 பேர் மற்றும் அவருக்கு கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனை பெண் டாக்டர் சுசீத்ரா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பான வழக்கு, திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் நடந்தபோது, 5 பேர் மீதும் 2011-ம் ஆண்டு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மகிளா கோர்ட்டுக்கு மாற்றம்

பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முதல் எதிரியான பாதிரியார் ராஜரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மற்ற 3 பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது.

தற்போது, கன்னியாஸ்திரிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் மீதான குற்றச்சாட்டுக்கு மட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேரில் ஆஜர்

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, நீதிபதி முன் நேரில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்