ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி
கோத்தகிரியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் தொடங்கியது.
கோத்தகிரி,
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு 2022-2023-ம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளது. இந்தநிலையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட 3-வது பருவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கோத்தகிரி தாலுகாவில் உள்ள 110 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பாடத்திற்கு 10 கருத்தாளர்கள் வீதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பயிற்சி முகாமை பள்ளி கல்வி தேர்வுத்துறை இணை இயக்குனர் செல்வகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி வழங்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். மேலும் ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கோத்தகிரி வட்டார வள மைய அலுவலர்களும் முகாமில் கலந்துகொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களிலும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.