சலுகை விலையில் போன் தருவதாக நூதன மோசடி
சலுகை விலையில் போன் தருவதாக நூதன மோசடி குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் பிரபாகரன், நகை தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணிற்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், பெங்களூருவில் உள்ள ஷோரூமில் இருந்து பேசுகிறேன் உங்கள் நம்பருக்கு சலுகை வந்துள்ளது. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ரூ.3 ஆயிரத்திற்கு கிடைத்துள்ளது என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
பிரபாகரனும் அதை நம்பி ஆர்டர் செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் அவருக்கு பார்சல் வந்தது. செல்போனுக்கான பணம் ரூ.3 ஆயிரம் மற்றும் டெலிவரி சார்ஜ் ரூ.200 சேர்த்து ரூ.3,200 கொடுத்து பார்சலை வாங்கி அதைப் பிரித்துப் பார்த்துள்ளார்.
அதில் செல்போனுக்கு பதிலாக ஏ.சி., பிரிட்ஜிற்கு பயன்படுத்தப்படும் பவர் சேவிங் எந்திரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த எந்திரம் சரிவர இயங்கவில்லை.
இதுகுறித்து பிரபாகரன் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசியபோது, அவர் ஆர்டர் எடுப்பது மட்டுமே எங்கள் வேலை பார்சல் பற்றி எங்கள் முதலாளியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து அவர் பள்ளிகொண்டா போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.
அதற்கு காவல்துறையினர் இந்த புகாரை நாங்கள் எடுக்க முடியாது. வேலூர் சைபர் கிரைமில் அளிக்கும்படி பிரபாகரனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.