நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; நீரில் மூழ்கிய தரைப்பாலங்கள்

Update: 2022-08-09 16:17 GMT


நத்தக்காடையூர் பகுதிகளில் செல்லும் நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

நொய்யல் ஆறு

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை கிராமம் மற்றும் பழையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதுவெங்கரையாம்பாளையம் கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான தரைப்பாலங்களை கடந்து நொய்யல் ஆறு செல்கிறது.

திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லை பகுதிகளை இணைக்கும் இந்த நொய்யல் ஆற்றின் தாழ்வான தரைப்பாலங்கள் வழியாக ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகர, கிராமங்களுக்கு தினந்தோறும் கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்து உள்ள கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் பலத்தமழை பெய்து வருகிறது.

மழைநீர் வெள்ளம்

இதனால் கடந்த 2 நாட்களாக நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கோவையில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் திருப்பூர் வழியாக வந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் அதிகரித்து வருவதால் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் கடந்த 2 நாட்களாக அப்படியே அதிக அளவில் மழை நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பகுதிகளில் நொய்யல் ஆற்றில் நேற்று மாலை 6 மணி முதல் திடீரென்று அதிக அளவில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மருதுறை, புதுவெங்கரையாம்பாளையம் கிராமங்கள் அருகில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது.

இதனால் மருதுறை, புதுவெங்கரையாம்பாளையம் கிராமங்கள் அருகில் உள்ள நொய்யல் ஆற்று தரைப்பாலம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதிகளில் நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுவதால் இந்த கரையின் இருபுறமும் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வரும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் அனைவருக்கும் திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை அறிவிப்பு

மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் செல்லும் நொய்யல் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வரும் கிராம பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நொய்யல் ஆற்றின் நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், நொய்யல் ஆற்றை எந்த வகையிலும் கடந்து செல்வதையும், உள்ளே இறங்கி குளிப்பதையும் முற்றிலும் அறவே தவிர்க்க வேண்டும் என்று 2 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்