நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-06-16 16:00 GMT

முத்தூர், ஜூன்.17-

நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல் ஆறு

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தில் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்திலான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தரைப்பாலத்தின் இருபுறமும் பாதுகாப்புக்கு தடுப்புச்சுவர்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இந்த தரைப்பாலத்தை கடந்து தினந்தோறும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

100 ஆண்டு பழமையான பாலம்

இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பழமையான தரைப்பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக தாழ்வான நிலையிலேயே இருந்து வருகிறது. மேலும் தரைப்பாலத்தின் இருபுறமும் தற்போது சீமை கருவேலமரங்கள் நீண்டு வளர்ந்து புதர் மண்டி வாகனங்கள் சீராக செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.

இந்த தரைப்பாலத்தில் உள்ள கான்கிரீட் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் வேகமாக பாய்ந்து வரும் மழைநீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சீறிப்பாய்ந்து செல்லும்.

உயர்மட்ட மேம்பாலம்

அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். மேலும் இந்த கான்கிரீட் சாலையில் தரைப்பாலம் உயர்மட்ட மேம்பாலமாக இல்லாததாலும், போதிய அகலம் ஏதுமின்றி இருப்பதாலும் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்க வழியின்றி உயரமான தடுப்புச்சுவர் இல்லாத நிலையில் நொய்யல் ஆற்றின் உள்ளே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு விடும் அபாயத்துடனும், அச்ச உணர்வுடனும் சென்று வருகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்புச்சுவருடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்