சேலத்தில் நள்ளிரவில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு குறிவைக்கும் கொள்ளையர்கள் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

சேலத்தில் நள்ளிரவில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு குறிவைக்கும் கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே மாநகரில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-31 21:30 GMT

சேலம்,

தொழில் நிறுவனங்கள்

சேலத்தில் வெள்ளிப்பட்டறைகள், சேகோசர்வ உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சேலத்துக்கு முக்கிய அடையாளமாக இரும்பாலை செயல்பட்டு வருகிறது. அதே போன்று நகை, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு கடைகளும் ஏராளமாக உள்ளன. அதன்படி தொழில் நிறுவனங்கள், கடைகளில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக வெள்ளிப்பட்டறைகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள்.

இந்த நிலையில் சேலத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து அடிக்கடி குட்கா பொருட்கள் கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள். மேலும் சமீப காலமாக இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடக்கிறது. இதுமட்டுமின்றி பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெளியூர் சென்று இருப்பவர்களின் வீடுகள் நோட்டமிட்டு அந்த வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பொருட்கள் திருடப்படுகின்றன. வழிப்பறி சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே ஆள் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு திருடும் கும்பல் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தீவிரப்படுத்த வேண்டும்

சேலம் ராஜாராம் நகரை சேர்ந்த சகுந்தலா:-

ராஜாராம் நகர் பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இரவு நேரத்தில் ஒரு வீட்டில் மின் மோட்டார் திருடப்பட்டது. மேலும் இங்கு உள்ள ஒரு கோவில் உண்டியல் திருட்டு போனது. தற்போது திருட்டுகள் குறைந்து உள்ளது. இருப்பினும் ராஜாராம் நகர் பகுதி உள்ளிட்ட நகரில் பல இடங்களில் இரவு நேரங்களில் தனியாக நடைபயிற்சி செல்ல பயமாக இருக்கிறது.

ஏன் என்றால் நகைகள் பறிக்கும் நோக்கில் அடிக்கடி அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். எனவே நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

பெரமனூரை சேர்ந்த முருகன்:-

மாநகர் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருடப்படுகிறது. எனவே ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தி இருப்பது தெரிந்தாலே, போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியை திருடர்கள் கைவிட்டு விடுவார்கள். ஏற்கனவே பார்த்த ஜெயில் தானே என்று நினைக்கும் ஒரு சில கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பற்றி பயப்படாமல் திருட்டில் ஈடுபடுவார்கள். அவர்களை பிடிக்கவும், திருட்டுகளை முழுவதும் தடுக்கவும் இரவு நேரங்களில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

தென் அழகாபுரத்தை சேர்ந்த ரவிக்குமார்:-

மாநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. சமீபத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வடமாநில வாலிபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். அவர் போலீசில் எனவே திருட்டுக்களை தடுக்க போலீசார் மேலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்