அண்ணாமலையின் பாதயாத்திரையால் தமிழகத்தில் எதுவும் நிகழ்ந்து விடாது சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி

அண்ணாமலையின் பாதயாத்திரையால் தமிழகத்தில் எதுவும் நடந்து விடாது என்று புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2023-07-18 18:45 GMT

புவனகிரி, 


சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொல்லைப்புறமாக...

மோடி அரசாங்கத்தின் அமலாக்கத்துறை தமிழகத்தில் மீண்டும் 2-வதாக ஒரு அமைச்சரை விசாரிக்கிறார்கள். மோடி அரசாங்கம் இதைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டார்கள். மேடையில் சென்று மக்களிடம் வாதங்களை வைத்து வெற்றி பெற முடியாதவர்கள் கொல்லைப்புறமாக வந்து அடக்க நினைக்கிறார்கள்.

செம்மண் அதிகமாக எடுத்து விட்டார் என்பது வழக்கு. இதற்காக எல்லாம் ஒரு விசாரணை செய்தால் என்ன ஆவது. அவர் மீது பெரிய குற்றங்கள் எதாவது இருந்தால் சொல்லுங்கள். இழிவான குற்றங்களை சொல்லாதீர்கள்.

வன்மையாக கண்டிக்கிறது

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், தோழமை கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பக்கமும் அமலாக்கத்துறை செல்லவில்லை. மத்தியில் 33 அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் வீடுகளிலும் ரெய்டு போகவில்லை. இந்த ஊரிலேயே இருக்கும் தோழமை கட்சியின் பழைய அமைச்சர்களிடத்திலும் ஏன் அமலாக்கத்துறை செல்லவில்லை.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் செல்கிறார். அவர் இந்த கூட்டணியை மேன்மைப்படுத்துகிறார். மோடி அரசுக்கு எதிராக பரப்புரை செய்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காக இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதல்ல. காங்கிரஸ் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது என்பது அமைச்சர் பொன்முடிக்கும், முதல்-அமைச்சருக்கும் தெரியும். நாங்கள் எல்லாம் அவர்களோடு துணையாக இருக்கிறோம்.

தோல்வி அடைந்து விட்டன

அண்ணாமலை 200 பட்டியல் வேண்டுமானாலும் வெளியிடட்டும். நடந்து போகட்டும். உருண்டு போகட்டும். எதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. பாதயாத்திரையால் தமிழகத்தில் எதுவும் நடந்து விடாது. விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்.

தமிழக கவர்னர் எடுத்த 3 நடவடிக்கைகளும் தோல்வி அடைந்து விட்டன. அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுதான் அவரது நிலை. ஒரு கவர்னர் மாளிகைக்கு இந்த அவலம் வரக்கூடாது. கவர்னர் சிந்திக்காமல் கோபத்தில் செயல்படுகிறார். அதனால் எதுவும் வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்