விசாரணை குழு அறிக்கையில் திருப்தி இல்லை- ஒன்றரை வயது குழந்தையின் தாய் பேட்டி
ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தை முகம்மது மகீருக்கு இருதய கோளாறு கிடையாது. விசாரணை குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று தாய் அஜிஷா தெரிவித்தார்.
சென்னை,
ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தை முகம்மது மகீருக்கு இருதய கோளாறு கிடையாது. விசாரணை குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று தாய் அஜிஷா தெரிவித்தார்.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகீருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவிடம் கடந்த 4-ந்தேதி தாய் அஜிஷா ஆஜர் ஆகினார். இந்த நிலையில், விசாரணை குழுவின் அறிக்கை இன்று வெளியிட்டப்பது.
இந்த அறிக்கை தொடர்பாக, தாய் அஜிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ அறிக்கையில் எங்களுக்கு துளி கூட திருப்தி கிடையாது. விசாரணை ஆணையத்திடம் நாங்கள் அளித்த புகாருக்கு நேர் எதிராக தான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. என்னுடைய குழந்தைக்கு நடந்தது மற்றொரு குழந்தைக்கு நடக்காது என்பதில் என்ன உத்திரவாதம் இருக்கிறது. முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தை கண்காணிக்க வேண்டும். அடுத்ததாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி டீனிடம் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலான முழு அறிக்கையையும் கேட்க உள்ளோம். என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்தால் போதும். வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை" என்றார்.