ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அரசியலில் பயணித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்- கே.பி.முனுசாமி
‘ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அரசியலில் பயணித்ததை நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது’ என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் எய்த அம்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியுடன் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் பத்திரிகையாளரை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, நான் தி.மு.க.வின் நிர்வாகிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் பெட்ரோல் பங்கை 99 ஆண்டுகளுக்கு என் மகன் பெயரில் (எம்.சதீஷ்) நான் லீசுக்கு எடுத்திருப்பதாகவும், இது தி.மு.க. ஆட்சியில் எனக்கு கிடைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
நான் தி.மு.க.வு.க்கு துதி பாடாமல் அ.தி.மு.க.வில் ஒழுங்காக செயல்படுமாறும் அவர் அறிவுரை கூறியிருக்கிறார். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது என் கடமை.
கோவை செல்வராஜ் வெறும் அம்பு. எய்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் குறிப்பிட்ட பெட்ரோல் பங்க் என்பது, அரசுக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக 2017-ம் ஆண்டு அந்த இணையத்தில் ஒரு தீர்மானம் போடப்பட்டு அதன் அடிப்படையில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்துடன் இணைந்து அந்த பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டது. அந்த பெட்ரோல் பங்கைத்தான் கடந்த மாதம் 25-ந்தேதி அமைச்சர் காந்தி தொடங்கி வைத்திருக்கிறார். அதற்கான ஆதாரமும் இருக்கிறது. (ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் காட்டுகிறார்).
வெட்கமாக இருக்கிறது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும், ஆவின் நிறுவனமும் சேர்ந்து செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த பெட்ரோல் பங்குக்கு 20 ஆண்டுகள் ஒப்பந்த காலமாக போடப்பட்டு இருக்கிறது. இதுகூட தெரியாமல் பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களது நற்பெயரை கெடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின்பேரில் கோவை செல்வராஜ் இதுபோன்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் இதேபோலதான் கோடநாடு நிகழ்ச்சிகளிலும் தனது மகனை அழைத்து பேட்டியளிக்க செய்தார். 4½ ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் துணை முதல்-அமைச்சராக அவர் பயணித்தார். அப்போது இந்த சிந்தனை வரவில்லையா?. இப்போது தவறுக்கு மேல் தவறு செய்து, பொதுமக்கள்-தொண்டர்கள் வெறுத்து ஒதுக்கும் சூழலில், எங்களது நற்பெயரை கெடுக்க, ஓ.பன்னீர்செல்வம் இப்படி செய்வது, நீண்டகாலமாக அவருடன் அரசியலில் பயணிக்கும் எங்களை போன்றவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. இவருடன் ஏன் பயணித்தோம் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது.
என்னை தி.மு.க.வின் கைக்கூலி என்பதா?
தி.மு.க.வின் கைக்கூலியாக செயல்படுவதாகவும், அ.தி.மு.க.வின் ரகசியங்களை அங்கே எடுத்து சென்று வருவதாகவும் கோவை செல்வராஜ் என்னை பற்றி பேசியிருக்கிறார். எத்தனை ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டனாக இருந்து வருகிறேன். நேற்று வரை காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.வாக ஆகி, ஆதாயம் தேடுவதற்காக பல்வேறு கட்சிகளுக்கு சென்று, இன்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு இப்படி பேசுகிறார். அவருக்கு இந்த வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வம் கொடுக்கிறார். கோவை செல்வராஜ் மீது எனக்கு வருத்தம் இல்லை. காரணம் அவர் கைக்கூலி. அப்படித்தான் பேசுவார். ஆனால் அவரை இப்படி பேச ஓ.பன்னீர்செல்வம் எப்படி ஊக்கப்படுத்துகிறார்? என்பது தெரியவில்லை.
ஒரு கட்சிக்குள் இருக்கக்கூடிய கருத்து பரிமாற்றங்களை, மனக்கசப்புகள் வரும்போது காட்டி கொடுப்பவரை விட கேவலமான அரசியல்வாதி யாருமே இருக்கமுடியாது. அந்த ரகசியங்களை கட்டி காத்து வெல்பவரே உண்மையான அரசியல்வாதி. ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து நான் பணியாற்றியபோது நடந்த சம்பவங்கள் ஒன்றைகூட நான் வெளியிட மாட்டேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கையா?
இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் ஒருங்கிணைந்து இருக்கிறோம். அவருடன் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்போம்.
நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்று செயல்படுவோம். அதேவேளை திட்டமிட்டபடி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றே தீரும். இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து, 'எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பேற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?', என்ற கேள்விக்கு, ''ஜனநாயக முறைப்படி ஒன்றன்பின்ஒன்றாக இந்த கட்சியின் செயல்பாடுகள் இருக்கும். அதில் ஜனநாயகம் உயர்ந்து நிற்கும். எந்த சூழலிலும் சர்வாதிகாரம் தலையிடாது'', என்று கே.பி.முனுசாமி பதிலளித்து சென்றார்.