கையெழுத்திட்ட ேததியை குறிப்பிடாதது ஏற்புடையதல்ல: ஒரே வழக்கில் கலெக்டர், தாசில்தார் அறிக்கைகள் முரணானது எப்படி? - கல்குவாரி விவகாரத்தில் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கையெழுத்திட்ட ேததியை குறிப்பிடாதது ஏற்புடையதல்ல என்றும், ஒரே வழக்கில் கலெக்டர், தாசில்தார் அறிக்கைகள் முன்னுக்குபின் முரணாக இருப்பதாகவும் எனவே கல்குவாரி வழக்கில் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-13 21:07 GMT


கையெழுத்திட்ட ேததியை குறிப்பிடாதது ஏற்புடையதல்ல என்றும், ஒரே வழக்கில் கலெக்டர், தாசில்தார் அறிக்கைகள் முன்னுக்குபின் முரணாக இருப்பதாகவும் எனவே கல்குவாரி வழக்கில் கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குடியிருப்பு பகுதியில் குவாரி

புதுக்கோட்டை மாவட்டம் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு பழமையான புரதான சின்னங்கள் நிறைந்த சிவன் கோவில் உள்ளது. அதன் அருகில் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கல்லறை உள்ளிட்டவை உள்ளன.

இவ்வாறு குடியிருப்புகள், வழிபாட்டு தலம் உள்ள பகுதியில் 300 மீட்டர் சுற்றளவுக்குள் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என சட்ட விதிகளும், ஐகோர்ட்டு உத்தரவும் தெளிவாக கூறுகின்றன.

இந்த நிலையில் இவற்றை மீறி, அங்கு கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பது சட்ட விரோதம். தற்போது குவாரி செயல்பாட்டிற்காக நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமித்து குவாரிக்கான வாகனங்கள் செல்லும் சாலையாக மாற்றியுள்ளனர்.

ரத்து செய்யுங்கள்

இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே சட்ட விதிகளுக்கு முரணாக கல் குவாரி நடத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். முதற்கட்டமாக அந்த குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஹென்றி டிபென், கருணாநிதி ஆகியோர் ஆஜராகி, கல்குவாரி அருகில் கோவில், பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவை இருப்பதற்கான புகைப்படங்களையும், நீர்நிலை கால்வாயை ஆக்கிரமித்ததற்கான புகைப்படங்களையும் நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் அதிருப்தி

அவற்றை பார்வையிட்ட நீதிபதிகள், இந்த சூழலில் எவ்வாறு கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் அந்தப் பகுதி தாசில்தார் ஆகியோரின் சார்பில் தனித்தனி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை படித்த நீதிபதிகள், தாசில்தார் அறிக்கையில், கல்குவாரியை சுற்றிலும் கோவில், குளங்கள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளன என்று தெரிவித்துள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டர் அறிக்கையில், இவை எதுவும் இல்லை என்பது போல் கூறியுள்ளார் ஒரே விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள் எதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுகின்றன?

மேலும், கலெக்டரின் அறிக்கையில் அவர் எப்போது கையெழுத்து போட்டார் என்பதற்கான தேதி விவரம் குறிப்பிடப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியின் இந்த செயல் ஏற்புடையதல்ல என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கலெக்டர் ஆஜராக உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்