பழனியில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்கள் பழனியில் குவிந்தனர்.

Update: 2023-10-25 21:15 GMT

வடமாநில தொழிலாளர்கள்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அதேபோல் சபரிமலை சீசன் காலத்திலும் தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

ஆண்டுதோறும் சபரிமலை சீசன் காலத்தில் பழனி அடிவாரம், கிரிவீதி சாலையோரங்களில் அலங்கார பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெறும். அதேபோல் சாலையோரத்தில் நின்றபடி இசை உபகரணங்கள், விளையாட்டு பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதில் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளே அதிகம் ஈடுபடுகின்றனர். இதற்காக ஒரு மாதம் முன்னரே அவர்கள் பழனிக்கு வந்து தங்குகின்றனர்.

ஆவணங்கள் சோதனை

அதன்படி, விரைவில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளதால் தற்போது பழனிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள், சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையோரம் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர். வழக்கமாக பழனியில் முகாமிட்டுள்ள வெளிமாநிலத்தவர்களிடம் பழனி டவுன் போலீஸ் சார்பில் ஆதார் அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று சோதனை செய்யப்படும். அந்தவகையில் தற்போது பழனியில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்களிடம் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பழனியில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்துவதுடன் அவர்களின் ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்