வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (2022) வடகிழக்கு பருவ மழை குறைவாக பெய்தது.

Update: 2023-01-29 18:52 GMT

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும். அந்த வகையில் கடந்த ஆண்டில் (2022) அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்திருந்தது.

அதனால் கடந்த ஆண்டிலும் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் பருவ மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. நெல், நிலக்கடலை, வாழை, கரும்பு, சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் எராளமானோர் விவசாயம் செய்திருந்தனர்.

குறைவாக பதிவு

இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்யவில்லை. இதனால் மழையை நம்பி பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். வழக்கமாக 372.72 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாக வேண்டியது. ஆனால் சராசரியாக 312.52 மில்லி மீட்டர் அளவு தான் மழை பெய்து பதிவாகி உள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2021-ம் ஆண்டில் 651.54 மில்லி மீட்டர் அளவும், கடந்த 2020-ம் ஆண்டில் 456.97 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்து பதிவாகி உள்ளது. இதனை ஒப்பிடும் போது கடந்த 2022-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது குறிப்பிடத்தக்கது. பருவமழை பெய்ததால் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீா் இல்லாமல் காய்ந்து போனது.

4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

இதற்கிடையில் பிற பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் போது 24 எக்டேர் பாதிப்படைந்ததில் 64 விவசாயிகள் பாதிப்படைந்திருந்தனர். அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 75 நிவாரணம் வழங்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டில் பெய்த மழையினால் 1933 எக்டேர் விவசாய நிலம் பாதிப்படைந்திருந்தது. 3 ஆயிரத்து 277 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 561 நிவாரணம் வழங்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழையின் போது 62 வீடுகள் சேதமடைந்ததில் ரூ.3 லட்சத்து 500-ம், 38 மாடுகள் இறந்ததில் ரூ.7 லட்சத்து 7 ஆயிரம் இழப்பீடாக கொடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டில் தான் மழையின் போது மின்னல் தாக்கி 4 பேர் இறந்தனர். இதில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

காரணம் என்ன?

மழை குறைவாக பெய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை கடந்த ஆண்டில் அதிகமாக எங்கும் பெய்யவில்லை. பொதுவாக இந்த சீசனில் தொடர் மழையாக காணப்படும். புயல் சின்னங்களும் ஏற்படும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டில் பெரிய அளவில் மழையும் இல்லை. அதனால் பாதிப்பும் ஏற்படவில்லை. புயல் சின்னங்களின் போதும் மழை குறைவு தான் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்