வட மாநில தொழிலாளர்கள் வீடியோ வைரல் விவகாரம்:பீகார் வாலிபர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வட மாநில தொழிலாளர்கள் வீடியோ வைரல் விவகாரத்தில் பீகார் வாலிபர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-07-24 20:51 GMT


தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சித்தரிக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரல் ஆனது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், பீகாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப், சித்ரஞ்சை குமார் திவிபெதி ஆகியோர்தான் பொய்யான வீடியோவை வெளியிட்டு வடமாநிலத்தினரிடம் பீதியை கிளப்பியது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். முதல் கட்டமாக முக்கிய குற்றவாளியான மணிஷ்காஷ்யப் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய சித்ரஞ்சை குமார் திவிபெதி தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் நம்பி செல்வன் ஆஜராகி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. எனவே அவரிடம் போலீசார் நேரில் விசாரணை செய்ய வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். விசாரணை முடிவில், மனுதாரரை வருகிற 7-ந் தேதி வரை ைகது செய்ய கூடாது. அதற்குள் அவர் தன் மீதான வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்