தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வடமாநில வாலிபர் பலி - நண்பர் படுகாயம்
சூரிய உதயத்தை பார்க்க மெரினா கடற்கரைக்கு சென்றபோது தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வடமாநில வாலிபர் பலினார்.;
அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மந்தான் (வயது 33). இவர் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்தார். இவரது நண்பர் அரிஓம் (28). இருவரும் நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக சென்னை கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் மந்தான் பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து, விபத்தில் இறந்து போன ராஜேஷ் மந்தான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்