ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக ரூ.66 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கல்லூரி மாணவர் கைது
ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக ரூ.66 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கல்லூரி மாணவரை உத்தரபிரதேசம் சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை பெருங்குடியை சேர்ந்த 35 வயது ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர், கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், "ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் மூலம் நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அதை நம்பி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.66 லட்சத்து 22 ஆயிரத்து 450-ஐ அனுப்பிவைத்தேன். ஆனால், நான் செலுத்திய தொகை எதுவும் எனக்கு திரும்ப வரவில்லை. எனவே, மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று கூறியிருந்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் விசாரணை
மோசடி நபரின் வங்கிக் கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்களை வங்கியில் இருந்து சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வங்கிக் கணக்கு மணிஷ்குமார் என்ற பெயரில் இருந்ததும், அதை அவரது மகன் ரிதம் சவ்லா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. ரிதம் சவ்லா அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், கடந்த 11-ந்தேதி உத்தரபிரதேச மாநில ரேபரேலி சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்குள்ள குருநானக் நகரில் பதுங்கி இருந்த ரிதம் சவ்லாவை (வயது 20) போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு
பின்னர், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடியே 60 லட்சம் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதை ஒப்புக்கொண்டார்.
சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரிதம் சவ்லா நேற்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.19 லட்சத்து 10 ஆயிரம் முடக்கி வைக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ஏற்கனவே, கைது செய்யப்பட்டுள்ள ரிதம் சவ்லா மீது மும்பை தானேவில் உள்ள மனப்பாட காவல் நிலையத்தில், ஒரு வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடி குறித்தும், டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.