தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு

தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-10-19 20:47 GMT

சென்னை,

இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

வழக்கமாக அக்டோபர் மாதம் 20-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். இந்த தேதியில் இருந்து 7 நாட்களுக்குள்ளாகவோ அல்லது 7 நாட்களுக்கு பின்போ கூட தொடங்க வாய்ப்பு உள்ளது. அது இயல்பானது தான். அதன்படி, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்த பருவமழை நீடிக்கும். தமிழ்நாட்டுக்கு ஆண்டு மழைப் பொழிவில் அதிக மழை பெறக்கூடிய பருவமழையாகவும் இது இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா, ராயல்சீமா ஆகிய தென் இந்திய பகுதிகளில் இந்த வடகிழக்கு பருவமழை பொழிகிறது.

3 தினங்களில் தொடங்கக்கூடும்

இந்த நிலையில் தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது கிழக்கு, வடகிழக்கு திசையில் இருந்து தென் இந்திய பகுதிகளுக்கு காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் 3 தினங்களில் (இன்று முதல் நாளை மறுதினத்துக்குள்) தென் இந்திய பகுதிகளில் தொடங்கக் கூடும். தற்போது அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக்கடல் பகுதியில் 21-ந்தேதியையொட்டி (நாளை) உருவாக வாய்ப்புள்ளது.

இந்த 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளால், தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் தொடக்க நிலை வலு குறைந்து காணப்படும். மீனவர்களை பொறுத்தவரையில், தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு 23-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் செல்ல வேண்டாம்.

இயல்பையொட்டி மழை இருக்கும்

இந்த 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிகழ்வுகளின் நகர்வுகளை பொறுத்துதான், அடுத்து வரும் நாட்களில் மழைப் பொழிவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியும்.

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை நிறைவு பெற்றுள்ள நிலையில், 35.4 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 74 சதவீதம் அதிகமாக 77 செ.மீ. வரை மழை கிடைத்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு தென் இந்திய பகுதிகளிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் இயல்பையொட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளில் சராசரியாக 33 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு 29 செ.மீ. முதல் 37 செ.மீ. பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுழல் காற்று

இதையடுத்து சமீபத்தில் சென்னை கடற்கரைப் பகுதியில் சுழல் காற்று வந்தது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'குறுகிய பகுதியில் எதிரெதிர் திசையில் வேகமாக காற்று வீசும்போது ஏற்படக்கூடிய இதுபோன்ற சுழல் காற்றை கணிக்க முடியாது. அதுபற்றிய விவரங்களும் இல்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்