சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
மிக்ஜம் புயல் பாதிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட கையாண்டார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மிக்ஜம் புயல் வெள்ளத்திற்கு பிறகு சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரசின் தொடர் நடவடிக்கையால் சென்னைக்கு வரவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மழைநீர் அகற்றப்பட்டு தற்போது பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஓட்டு போடாதாவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு, உபரி நீர் திறப்பை முன்கூட்டியே கணித்து சரிவர கையாண்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கையாண்டதால்தான் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கு உதவி தேவையோ, அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2015 வெள்ளத்தின்போது 10,780 கோடி நிவாரணத்தை மத்திய அரசிடம் கேட்டிருந்தனர். தற்போது 5 ஆயிரம் கோடி மட்டுமே நிவாரணம் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். கடந்த 2015-ல் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அரசின் தொடர் நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும். மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தாலுகா வாரியாக நிவாரணம் வழங்கப்படும். வரும் 16-ம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்படும். அரசு சார்பில் எந்தவொரு விவரங்களும் மூடி மறைக்கபடவில்லை. எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கொரோனாவைப் போல 'மிக்ஜம்' புயல் பாதிப்பையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட கையாண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.