மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை... அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள தி.மு.க. தயார் - அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள தி.மு.க. தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Update: 2022-12-21 09:08 GMT

சென்னை,

சென்னையில் பாடி கைலாசநாதர் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில்களில் திருப்பணிகள் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள் மீது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது வெளிப்படையான உலகம். இதில் எதையும், மறைத்து வாழ முடியாது. எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

எந்த நிலையிலும், எதையும் எதிர்கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சரை பொறுத்தளவில், இந்த திராவிட மாடல் ஆட்சியானது லஞ்ச லாவண்யத்திற்கு அப்பாற்பட்டு மக்களின் நலன் காக்கின்ற ஆட்சி நல்லதொரு ஆட்சியாக நடத்தி வருகிறார்.

இதுபோன்ற இடையூறுகள், தடைகளை எல்லாம் படிக்கட்டுகளாக்கி, தமிழகத்தை இந்திய திருநாட்டின் முதன்மையான மாநிலம் ஆக்கிட வேண்டுமென முதல்-அமைச்சர் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்