விவசாய நிலங்களை அழித்து பிளாட்டின சுரங்கம் அமைக்கக்கூடாது

கந்தம்பாளையம் அருகே விவசாய நிலங்களை அழித்து பிளாட்டின சுரங்கம் அமைக்கக்கூடாது என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Update: 2022-10-14 19:00 GMT

கந்தம்பாளையம்

பிளாட்டினம்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடியில் பிளாட்டினம் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனிம வளத்துறையின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கருங்கல்பட்டி, ராமதேவம், தொட்டியந்தோட்டம், பாமாகவுண்டம்பாளையம், சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் பூமிக்கு அடியில் சுமார் 80 முதல் 250 அடி வரை துளையிட்டு கனிமவளத்துறை வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் அவை முதல் தரமான பிளாட்டினம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வு

அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் கருங்கல்பட்டி முதல் தொட்டியந்தோட்டம் வரை கூடுதலாக பிளாட்டினம் கற்கள் இருப்பது தெரியவந்தது. பிற இடங்களில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் பிளாட்டினம் கற்கள் இருப்பதாக அப்போது ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2-ம் கட்ட ஆய்வுப்பணிகள் நடந்தன. அதற்காக ஐதராபாத்தில் இருந்து நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டதோடு, சுமார் 25 கி.மீட்டர் சுற்றளவில் பூமிக்கு அடியில் 300 அடி முதல் 350 அடி வரை துளையிடப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவிகளை, துளையிடப்பட்ட குழிக்குள் செலுத்தி கணினியின் மூலம் சிக்னல்கள் கண்காணிக்கப்பட்டது.

தகவல்கள் பதிவு

அதன் அளவுகளைப் பொறுத்து கற்கள் எவ்வளவு ஆழத்தில் உள்ளது? கற்களின் உயரம், பரப்பளவு மற்றும் நிறங்கள் உள்பட பல்வேறு வகையான தகவல்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அந்த தகவல்கள் அனைத்தும் ஐதராபாத்தில் உள்ள தலைமை புவியியல் ஆய்வுத்துறை ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் நவீன எந்திரம் மூலம் 800 அடி முதல் 1,000 அடி வரை நிலத்தின் அடியில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தலைமை புவியியல் ஆய்வுத்துறை அதிகாரி ராய் சவுத்ரி தெரிவித்து இருந்தார். அதேபோல் ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு மத்திய அரசிடம் அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதோடு, சுரங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கற்களை வெட்டி எடுத்து அதில் இருந்து பிளாட்டினம் பிரித்து எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு எவ்வித பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

விவசாயம் பாதிப்பு

இதனிடையே பிளாட்டினம் எடுக்கப்பட்டால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதனால் விவசாய விலை நிலங்களை விட்டுவிட்டு விவசாயிகள் வேறு பகுதிகளுக்கு குடிப்போகும் நிலை உருவாகும் என அவர்கள் கூறினர். அதன் காரணமாக பிளாட்டினம் எடுக்கும் முயற்சியை அரசு கைவிடுமா? என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்‌.

சித்தம்பூண்டி கல்லாங்காடு புதூரை சேர்ந்த விவசாயி பரமேஸ்வரி கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் காவிரி ஆற்று தண்ணீர் பாய்ந்து விவசாயம் நடைபெற்று வருகிறது. கரும்பு, வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பச்சை நிற விவசாயமாக காட்சியளிக்கிறது. விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பி ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். எனவே விவசாய நிலங்களை அழித்து பிளாட்டின சுரங்கம் அமைக்கக்கூடாது.

கைவிட வேண்டும்

இப்பகுதியில் பிளாட்டினம் எடுக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். மேலும் விவசாய நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிடும். எனவே பிளாட்டினம் எடுப்பதை அரசு மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்.

கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் கூறியதாவது:-

இப்பகுதியில் பிளாட்டினம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக நீர்வளம் குறையும். வெடிமருந்தோ ரசாயனங்களை பயன்படுத்தி பிளாட்டின கற்கள் எடுக்கப்பட்டால் நீர் மாசுபடும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும். மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் தகுதியற்ற சூழல் ஏற்படும்.

ஏற்கனவே இப்பகுதியில் பிளாட்டினம் எடுப்பதாக ஆய்வு நடைபெற்ற போதே விவசாயம் பாதிக்கப்பட்டது. எனவே பிளாட்டினம் எடுப்பது தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டால் விவசாயிகள் வீடுகளை விட்டு, விவசாய நிலங்களை விட்டு வேறு ஊர்களுக்கு குடிபோகும் நிலை ஏற்படும். எனவே விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் பிளாட்டினம் எடுக்கும் முயற்சியை முழுமையாக அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்