பிரதமர் மீது லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு வைத்தால் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்

பிரதமர் மீது லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு வைத்தால் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பா.ஜ.க. 9 ஆண்டு கால சாதனைகள் விளக்க  பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் ராம சீனுவாசன் பேசினார்.

Update: 2023-07-01 17:13 GMT

பிரதமர் மீது லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு வைத்தால் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பா.ஜ.க. 9 ஆண்டு கால சாதனைகள் விளக்க  பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் ராம சீனுவாசன் பேசினார்.

பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் விளக்க  பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் முருகன், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், தெற்கு நகர தலைவர் மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

இதில் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட பார்வையாளர் தசரதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக நபார்டு வங்கி இயக்குனரும் மாநில பொதுச் செயலாளருமான ராம சீனுவாசன், மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கார்த்தியாயினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநில பொது செயலாளர் ராம சீனுவாசன் பேசியதாவது:-

2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா என்றால் கடனாளி நாடு, வறுமை, ஊழல் என்று இருந்ததை பா.ஜ.க. அரசு மாற்றி காண்பித்து உள்ளது.

குற்றச்சாட்டுகள் கிடையாது

9 ஆண்டு காலத்தில் எந்தவிதமான லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மட்டுமின்றி அவரது அவையில் உள்ள மந்திரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது. இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

பிரதமர் மீது லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்தால் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அப்படி ஒரு வெளிப்படையான ஆட்சி நடைபெற்று வருகிறது. வருவமான வரித்துறை, அமலாக்க துறை சோதனை வந்தால் நான் நல்லவன் என்று நிரூபிக்க வாய்ப்பு என்று சந்தோஷ படுங்கள்.

நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துவிட்டால் அவர் இடத்தில் யாரும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். செந்தில்பாலாஜி இருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு உள்ளதை கண்டறிந்தது அமலாக்கத்துறை தான்.

அதற்கு அவர்கள் அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக விரைவில் தி.மு.க.வினருக்கு எத்தனை இடத்தில் அடைப்பு உள்ளது என்பதை கண்டறிய அமலாக்கத்துறை தயாராக உள்ளது.  

தமிழ் மொழி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒலித்த முதல் மொழி தமிழ் மொழி. 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை மட்டும் புறக்கணிக்கவில்லை.

எதிர்காலத்தில் புதிய நாடாளுமன்றத்தில் போகவே முடியாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமும் பா.ஜ.க.வின நரேந்திர மோடியை பிரதமராக்குவதற்கு தான் வாக்களிக்க தயாராக உள்ளனர். திருவண்ணாமலை நாடாமன்ற தொகுதியில் பா.ஜ.க. மலர போகிறது. தற்போது மவுன புரட்சி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. பா.ஜ.க.வினர் மீது தி.மு.க.வினர் கோபத்தில் உள்ளனர். அதனால் பா.ஜ.க.வினர் மீது எந்த நேரத்திலும் பொய் வழக்கு போடலாம்.

என் மீதும் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளலாம். 24 மணி நேரமும் விடுமுறை எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வருகிறார். இங்கே தொழில் தொடங்க பல்வேறு நாட்டினரையும் அழைத்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள அனைவருக்குமான ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சியின் பாதையில் பிரதமர் கொண்டு செல்கறார்.

உக்ரைன் பேரில் போது அபரேஷன் கங்காவை செயல்படுத்தி அங்கிருந்த 22 ஆயிரம் இந்திய மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டது.

அதேபோல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது. தி.மு.க.வினர் மிசாவை பார்த்தவர்கள் என்று பேசி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் அமித்ஷாவை பார்க்கவில்லை என்பது தான் உண்மை. நாங்கள் பழைய தி.மு.க.வாக இருந்தால் எப்படிப்பட்டவர்கள் என்பதை காண்பிப்போம் என்று கூறுகின்றனர். நாங்களும் கூறுகிறோம், நாங்கள் புதிய பா.ஜ.க. யார் என்பதை என்று காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சேகர், சிவசங்கரன், ராஜ்குமார், அருணை ஆனந்தன், கவிதாபிரதீஷ், அக்ரி சந்திரசேகரன், அமுதா, மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், ரேணுகாநடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட அணி தலைவர்கள் கலாவதி, பிரகாஷ், ரகுநாதன், விஜயராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் (வடக்கு) டி.எம்.ஆர்.சீனுவாசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்