பன்றி காய்ச்சல் யாருக்கும் இல்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பன்றி காய்ச்சல் இல்லை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒருவர் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததை தொடர்ந்து வாணியம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை.
இந்த பரிசோதனை வாலாஜாவில் உள்ள பொது சுகாதாரத்துறை பரிசோதனை கூடத்தில் செய்யப்பட்டது. வாணியம்பாடியில் உயிர் இழந்த நபர் கடந்த சில வாரங்களாக கல்லீரல் சுருக்கம் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் அவர் பல்வேறு கோவில்கள், நகரங்களுக்கு சென்றது தெரியவந்தது. ஆகவே அவருக்கு பயணத்தினால் வெளியூர்களில் வைத்து தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம்.
மாத்திரைகள் இருப்பு உள்ளது
பன்றிக்காய்ச்சல் குறித்து வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள அச்சப்பட தேவையில்லை. அங்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.
நியூடவுன் பகுதி முழுவதும் பிளிச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்க நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது.
தேவைப்படுபவர்களுக்கு மாத்திரை வினியோகம் செய்யப்படும். பொதுமக்களும் வெளியே வரும்போது முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.