கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2022-12-27 09:34 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிறுவையில் உள்ளது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் இன்று காலை தலைமை கழகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

திமுக அரசு மக்களிடம் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு மேலே உயர வேண்டும் என்று நினைத்தார்களோ, அதிலிருந்து தற்போது சரிந்துவிட்டனர். எனவே, மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆட்சியின் அவலங்களை எல்லாம் எடுத்துக் கூறுவதால், மக்கள் உணர்ந்துள்ளனர்.

2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வந்தால், இன்னும் நல்ல விஷயம். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கும் வகையில், கிளைக் கழகத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நிர்வாகிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உட்கட்சியில் பிரச்சனையே இல்லை. பிரச்சனையே இல்லாத ஒரு விஷயத்தை நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்தவொரு விவாதமும் செய்யவில்லை.

எங்களுடைய ஒரே நோக்கம் 2024-ல் திமுவை வீழ்த்த வேண்டும். நாற்பதும் நமதே, நாடு நமதே என்பதற்கேற்ப இலக்கை நிர்ணயிப்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடந்தது. ஆண்டிகள் சேர்ந்து ஒன்றாக மடம் கட்டுவார்கள் இல்லையா, அதுதான் ஓபிஎஸ்.எனவே அவர்கள் குறித்து விவாதித்து எங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான். இந்த கூட்டணியில் இடங்கள் பகிர்வு குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம்

என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்