ஆடிப்பட்டம் கைவிட்டு போனநிலையில் சம்பா சாகுபடி நடைபெறுமா?
சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஆடிப்பட்டம் கைவிட்டு போனநிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஆடிப்பட்டம் கைவிட்டு போனநிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதியும், கல்லணை ஜூன் 17-ந் தேதியும் திறக்கப்பட்டு 73 நாட்களுக்கு மேலாகிறது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறை வைத்து வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இதுவரை ஒரு முறை கூட 5 நாட்கள் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. 2 நாட்கள், 3 நாட்கள் என பெயரளவில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கப்படவில்லை.
ஆடு, மாடுகள் மேயும் அவலம்
முறை வைக்காமல் 30 நாட்கள் தண்ணீர் வழங்கினால் ஏரி குளங்களையும் நிரப்பிவிடலாம். அதே சமயம் நாற்றுவிடும் பணியும் நிறைவடைந்துவிடும். நல்ல மகசூல் கிடைக்கும் ஆடிப்பட்டமும் கை கூடிவிடும் என கடைமடை விவசாயிகள் பல முறை கூறியும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.இதனால் கடைமடை பகுதியில் இதுவரை எந்த ஏரியும் நிரம்பவில்லை. கடைமடை விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கவில்லை. விவசாயிகள் விதை நெல்லை இது வரை கையில் எடுக்காததால் விவசாய நிலங்கள் தரிசாக காணப்படுகிறது. இந்த நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகிறது. ஆடிப்பட்டம் கைவிட்டு போன நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டமும் குறைந்துவருவதால் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பில் மிகவும் கவலையுடன் உள்ளனர்.