சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் வழக்கம்போல் செயல்படும் என்றும் அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.