'போக்சோ' வழக்குகளில் அவசரமாக கைது நடவடிக்கை கூடாது -டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை

‘போக்சோ’ வழக்குகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் அனுமதியை பெற்று தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-12-05 00:23 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் சிறுவர் நீதிக்குழு மற்றும் 'போக்சோ' குழுவினர் 'போக்சோ' சட்டத்தை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழுவினர் 'போக்சோ' வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

* திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

* குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

அனுமதி கட்டாயம்

* குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

* முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த அறிவுரைகளை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்