அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை - அமலாக்கத்துறை தகவல்
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.;
சென்னை,
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது அவர் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் விதிகளை மீறி தனது மகன் டாக்டர் கவுதம சிகாமணிக்கு (தற்போது கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. யாக உள்ளார்) செம்மண் குவாரி ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரூ.28 கோடி இழப்பு
இந்த குவாரியில் ஒப்பந்தத்துக்கு மாறாக லாரி மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில், கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொன்முடி, கவுதம சிகாமணி உள்பட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கவுதம சிகாமணி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் (ஜூன்) 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து செம்மண் குவாரி வழக்கு மீண்டும் பரபரப்பு ஆனது.
இந்த முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருக்கலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
அமலாக்கத்துறை
இந்த வழக்கை மத்திய அரசின் அமலாக்கத்துறை கையில் எடுக்கலாம் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமலாக்கத்துறையின் வலையில் அடுத்து சிக்கப்போவது அமைச்சர் பொன்முடி என்று சமூக வலைத்தளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.
இந்த சூழ்நிலையில் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூ பகுதியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன் வந்தனர். வீட்டில் பொன்முடி இருந்தார். அவர், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்துக்கு சென்று வழி அனுப்பவேண்டும் என்ற மனநிலையில் இருந்தார்.
அதிரடி சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டில் சோதனை நடத்தவேண்டும் என்றுக்கூறி அதற்கான ஆவணத்தை பொன்முடியிடம் வழங்கினர். பின்னர் வெளி நபர்கள் யாரும் உள்ளே வராத வகையில் பொன்முடியின் வீட்டின் நுழைவு வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.
அதன்பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் வீட்டில் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். பொன்முடி முன்னிலையில் ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்தனர்.
திரண்ட தொண்டர்கள்
இதற்கிடையே பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் தகவலறிந்து தி.மு.க. தெற்கு மாவட்ட வக்கீல் அணியை சேர்ந்த நிர்வாகிகளும், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட நிர்வாகிகள் திரண்டனர். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் வருகை தந்தார். அவர் பொன்முடியின் வீட்டுக்கு உள்ளே செல்ல முயன்றார். அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இந்த சோதனை என்று கண்டனம் தெரிவித்து நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த சோதனைக்கு மத்தியில் மதியம் 2 மணி அளவில் அதிகாரி ஒருவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அவர் கையில் ஏதேனும் ஆவணம் வைத்திருக்கிறாரா? என்பதை படம் பிடிக்க புகைப்படகலைஞர்கள் அவரை சூழ்ந்தனர். ஆனாலும் அந்த அதிகாரி வெறுங்கையோடுதான் புறப்பட்டுச் சென்றார். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நீடித்தது.
வெளிநாட்டில் முதலீடு
அமைச்சர் பொன்முடியின் மகனான கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணி கடந்த 2008-ம் ஆண்டு இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் 2.45 லட்சம் பங்குகளை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (அப்போதைய இந்திய மதிப்பு ரூ.41 லட்சத்து 57 ஆயிரம்), ஐக்கிய அமீரகத்தில் 55 ஆயிரம் டாலர் (அந்த காலக்கட்டத்தில் இந்திய மதிப்பு ரூ.22 லட்சத்து 86 ஆயிரத்து 924) முதலீடு செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெறாமல் இந்த முதலீட்டை செய்ததால் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முறைகேடுக்கு ஒப்பானதாகும். இதுதொடர்பாக இந்த சட்டப்பிரிவின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 இடங்கள்
சென்னை தவிர விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீடு, கவுதம சிகாமணி வீடு, அவருக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லூரி, அலுவலகம் உள்பட மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.
ஆனால் எத்தனை இடங்கள் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவலை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
மாற்று சாவி மூலம் திறக்கப்பட்ட பீரோக்கள்
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், காலை 8.10 மணி முதல் சோதனையை தொடங்கினர். அப்போது வீட்டில் இருக்கும் பீரோக்களை திறந்து சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் பீரோக்களின் சாவியும் பொன்முடியின் குடும்பத்தினர் வசம் இருந்தது. இதனால் மாற்று சாவி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாளியான தனபால் என்பவரை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர்.
அவ்வாறு வந்த தனபால் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்த பீரோக்களை மாற்று சாவியின் மூலம் திறந்தார். அதிலிருந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால், பீரோ லாக்கருக்கான சாவியை அவரால் தயார் செய்து கொடுக்க முடியாமல் போனது.
வெளிநாட்டு பணம்
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடிவீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ.70 லட்சம் பணமும், பவுண்ட், டாலர் என வெளிநாட்டு பணம் ரூ.10 லட்சமும் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த பணம் எப்படி வந்தது? என்பது குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பி விசாரணை நடத்தியதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இந்த சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அழைத்துச் சென்றனர்
காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தனி அறையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கார் ஆகியவற்றையும் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிமுதல் நடைபெற்று வந்த விசாரணை இன்று நள்ளிரவு 3 மணியளவில் நிறைவடைந்தது.
கைது நடவடிக்கை இல்லை
தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் நிறைவடைந்தன. இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 19 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்தநிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக், "அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை" என்று கூறினார்.