மாற்றுத்திறனாளிகள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-10-20 16:47 GMT

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டினர்.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அப்துல்ரகூப் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி முன்னிலை வகித்தார். தாசில்தார் சுரேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அதிகாரிகள் நேரடியாக மனுக்கள் பெறுவதில்லை. பெட்டியில் போட சொல்லுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய ரசீது தரவேண்டும்.

அடையாள அட்டை

கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அடையாள அட்டை வழங்கக்கோரி மனு அளிக்கும் நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்க வேண்டும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை கிடைப்பதில்லை. உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ்செட்டிப்பட்டில் இருந்து வாணாபுரம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கூட்டத்தில் திருவண்ணாமலை வட்ட வழங்க அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் பன்னீர்செல்வம், சுகுணா, சாப்ஜான், ரேணுகா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் விஜயகுமார் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்