என்.எம்.எம்.எஸ். தேர்வில் 457 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று கல்வி மாவட்ட அளவில் பெரம்பலூர் முதலிடம்

என்.எம்.எம்.எஸ். தேர்வில் 457 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று கல்வி மாவட்ட அளவில் பெரம்பலூர் முதலிடம் பிடித்தது.;

Update: 2023-04-15 18:20 GMT

2022-23-ம் கல்வியாண்டிற்கு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 1,366 மாணவர்களும், 1,830 மாணவிகளும் என மொத்தம் 3,196 பேர் எழுதினர். அந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று மதியம் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 457 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். என்.எம்.எம்.எஸ். தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தமிழகத்திலேயே கல்வி மாவட்ட அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு பாடுபட்ட மாணவ-மாணவிகளுக்கும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வாழ்த்து தெரிவித்தார். தேர்ச்சி பெற்ற 457 மாணவ-மாணவிகளுக்கு, அவர்கள் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயின்றால் வங்கி கணக்கில் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.48 ஆயிரம் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்