என்.எல்.சி.சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மந்தாரக்குப்பத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
மந்தாரக்குப்பம்:
மந்தாரக்குப்பத்தில் அனைத்துகட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞர் அணியின் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் முதல் மற்றும் இரண்டாம் சுரங்க விரிவாக்க பணிக்கு வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் கடலூர் மாவட்டத்திற்கு என்.எல்.சி. நிர்வாகத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நிதியிலிருந்து கங்கைகொண்டான் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து புனரமைப்பு பணிகளை செய்து தரவேண்டும். கங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும், சேலத்தில் இருந்து நெய்வேலி மார்க்கமாக கடலூர் வரை ரெயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இந்த தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லைஎன்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மனோகரன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் இப்ராஹிம், வி.சி.க. ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பிச்சை, இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் பேரூர் தலைவர் தெய்வசிகாமணி, வக்கீல் ராமச்சந்திரன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் மதர்ஷா, தே.மு.தி.க. பேரூர் செயலாளர் பாபு, பா.ம.க. பேரூராட்சி கவுன்சிலர் சண்முகம், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெரியசாமி, வடதமிழ் நாடு மக்கள் முன்னணி செல்வம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் பாபு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சிலம்பரசன், வீ.த.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.