என்.எல்.சி. விவகாரம்: அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும் -எடப்பாடி பழனிசாமி

என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்தால் அ.தி.மு.க. போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2023-03-11 00:04 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உள்பட நில உரிமையாளர்களை சிறை வைத்துவிட்டு, டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் விளைநிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டதை அ.தி.மு.க. சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன்.

10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின்போது, என்.எல்.சி. நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த 22 மாதகால தி.மு.க. ஆட்சியில் என்.எல்.சி. மக்கள் விரோத போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக்கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடலூர் மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

போராட்டம்

கடலூர் மாவட்ட மக்களையும், விவசாயிகளின் நலனையும் மதிக்காத தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், சட்டப்படி குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

எல்லா பிரச்சினைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சினையிலும் தி.மு.க. அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அ.தி.மு.க. அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்