கள்ளக்காதலன் தாக்கியதில் காயமடைந்த பெண் துப்புரவு தொழிலாளி சாவு
கள்ளக்காதலன் தாக்கியதில் காயமடைந்த பெண் துப்புரவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வடமதுரை அருகே உள்ள ஆலம்பட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவர் செங்குறிச்சி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். அதே ஊராட்சியில் கணவரை இழந்த பாண்டியம்மாள் (40) என்பவரும் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக பாண்டியம்மாள், பழனிசாமியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
கடந்த 3-ந்தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பழனிசாமி, பாண்டியம்மாளை சரமாரியாக தாக்கினார். அப்போது காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.
இந்தநிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து பாண்டியம்மாள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.