திருப்பூர்
திருப்பூரில் தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் வகையில் 275 அரங்குகளுடன் நிட்டெக் கண்காட்சி தொடங்கியது. இதில் அதிநவீன பின்னலாடை எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
நிட்டெக் கண்காட்சி
பின்னலாடை உற்பத்தித்துறையை உயர் தொழில்நுட்பம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் திருப்பூர் ஹைடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் 16-வது நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி நேற்று காலை திருப்பூர் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஹைடெக் வளாகத்தில் தொடங்கியது. இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கண்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஹைடெக் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் ராயப்பன் அனைவரையும் வரவேற்றார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கண்காட்சி கையேட்டை வெளியிட சைமா தலைவர் ஈஸ்வரன் பெற்றுக்கொண்டார். நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன், பொதுச்செயலாளர் முருகசாமி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், சிம்கா தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களுக்கு ஹைடெக் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினார்கள்.
275 அரங்குகள்
கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட இரண்டு மெகா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், லூதியானா, பெங்களூரு போன்ற உள்நாடு மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, தைவான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 165 நிறுவனங்களின் ஆடை உற்பத்தி துறைக்கான அதிநவீன எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 275 அரங்குகளில் நிட்டிங், டையிங், ரைசிங், காம்பாக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தர ஆய்வு, செக்கிங், அயர்னிங், பேக்கிங் உள்ளிட்ட பின்னலாடைத்துறையின் அனைத்து பிரிவுகளுக்கான எந்திரங்கள் இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிட்டிங் முதல் பேக்கிங் வரை பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்து பிரிவுகளுக்கான நவீன எந்திரங்களும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன. சிறந்த வல்லுனர்கள், எந்திரங்களின் இயக்கம், புதுமைகள், உற்பத்தி திறன் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்கள்.
6-ந் தேதி வரை நடக்கிறது
கண்காட்சி வருகிற 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட ஜவுளி துறையினர், டெல்லி, மும்பை, பெங்களூரு நகர ஆடை உற்பத்தி துறையினர் கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள். இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள்.
மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை கண்காட்சியை பார்வையிட்டு எந்திரங்கள் கொள்முதலுக்கு வர்த்தக விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் கூடிய எந்திரங்கள் மூலமாக தொழிலாளர்களின் தேவையை குறைந்து ஆடை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த கண்காட்சி கைகொடுக்கும் என்று தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.