கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீன், ஏணி சார்ந்த குறியீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி பணிகளுக்கான இயக்குனர் இரா.சிவானந்தம் கூறியதாவது:-
கீழடி அகழாய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஏப்ரல் 5-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் 9 குழிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 183 தொல்பொருட்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளன. மேலும் வெவ்வேறு நிலைகளில் இருந்து எலும்பு மற்றும் கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்விற்கு சேகரிக்கப்பட்டுள்ளன.
பானை ஓடுகள்
முதல்கட்டமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நான்கு அகழாய்வு குழிகளில் சுமார் 35 செ.மீ. ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தரைதளம் 3 முதல் 6 செ.மீ. தடிமனுடன் காணப்படுகிறது. மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் தரைதளத்தின் கீழே, சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு-சிவப்பு, சிவப்பு பூச்சு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள் குவியலாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் துளையிடப்பட்ட பானை ஓடுகள் வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகள், ரசட் பூச்சு பெற்ற பானை ஓடுகள், அழகிய வேலைபாடுகள் கொண்ட பானை ஓடுகள் மற்றும் ரவுலட்டட் வகை பானை ஓடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மீன், ஏணி குறியீடுகள்
இந்த பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் மீன், ஏணி மற்றும் வடிவியல் சார்ந்த குறியீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட அகழாய்வில் இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.