கோவை கார் வெடிப்பு: உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-02 10:14 GMT

Image Courtesy: PTI (File Photo)

கோவை,

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள இந்து மத கடவுள் சிவன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிமருந்து உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றினர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜமேஷா முபின் மற்றும் சிலர் 3 இந்து மதவழிபாட்டு தலங்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 27-ம் தேதி வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. தனது விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை உக்கடம், அன்புநகர் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முகமது உசேன் என்பவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது பெற்றோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்