திருச்சி சிறப்பு முகாமில் 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

திருச்சி சிறப்பு முகாமில் 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2023-05-13 17:51 GMT

திருச்சி சிறப்பு முகாமில் 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருச்சி சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட்டில் வருதல், போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், தெற்கு சூடான், பல்கேரியா, ருவாண்டா, நைஜீரியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 20 பேர் 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினருடன் திருச்சி சிறப்பு முகாமில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் விழிஞ்சியம் துறைமுகம் பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

6 பேரிடம் விசாரணை

இந்த விசாரணையில் முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த குணசேகரன், பூக்குட்டி கண்ணன், முகமதுஅஸ்மின், கோட்டாகாமினி, பெர்னாண்டோ உள்பட 9 பேருக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 9 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதற்கிடையே போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய முக்கிய நபரிடம் டிரைவராக பணியாற்றி வந்த விக்னேஷ்வரன் என்பவர் திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி அவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இன்ஸ்பெக்டர் எப்சன் பிராங்கோ தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு வந்தனர். இவர்கள் முகாமில் இருந்த 6 பேரிடம் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது அவர்களுடைய வாக்குமூலத்தை கேமராவில் பதிவு செய்து கொண்டனர். இவர்கள் 6 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்தது.

பின்னர் பொன்மலைப்பட்டி பகுதியில் டிரைவர் விக்னேஷ்வரன் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துவிட்டு சென்றனர். இந்த விசாரணை நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சோதனை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்