முதல்-அமைச்சரின் ஜப்பான் பயணம் குறித்து ஜப்பான் பத்திரிகையில் செய்தி வெளியீடு..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் பயணம் குறித்து ஜப்பான் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை சேர்ந்த தொழில் துறையினரை சந்தித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரு நாடுகளுக்கு சென்னையில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி 9 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணத்தில் அவரது முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3,233 கோடிக்கும் மேல் முதலீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் பயணம் குறித்து ஜப்பானின் முன்னணி பத்திரிகையான 'நிக்கி'-யில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் "ஜப்பான் வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால், அங்கு தொழில் தொடங்கும் உங்களுக்கு திறமையான பணியாளர்களை வழங்க முடியும் என்றார்" என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.