டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே திறக்கப்படுகிறது மேட்டூர் அணை..!!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே 24ம் தேதி திறக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2022-05-21 08:13 GMT

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 24ம் தேதி நீர் திறக்கப்பட உள்ளது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டு அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும், நீர் இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும் உள்ளது.

அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே, வரும் 24ஆம் தேதி முதல் நீரைத் திறந்துவிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது 2வது முறையாகும்.

இது மட்டுமன்றி மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் திருச்சி தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பொம்பலூர் புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

மேலும் நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டபிடப்பட்டு, 23.4.2022 முதல் துவங்கப்பட்டு ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வரும் 31ஆம் தேதிக்குள் முடிவடையும். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது. முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அடைய எதுவாகும்.

இவ்வாறு மிக முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவும், சம்பா பயிருக்கான பணிகளை முன்னதாகவே தொடங்கி செயல்படுத்தவும் இயலும். வெள்ளக்காலங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்காது காக்கவும் இந்த நடவடிக்கை உதவும். இது மட்டுமன்றி தொடர்ந்து நீண்டகாலத்திற்கு நீர் கிடைக்கப் பெறுவதால் டெல்டா பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இது வழிவகுக்கும்.

குறுவை சாகுபடி பணிகளுக்காக விவசாய இடுபொருட்களும், வேளாண் கடன்களும் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க அரசுதுறைகளும் மாவட்ட கலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

நீரை முறையாகப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து இந்த ஆண்டும் நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வளம் பெருகிட வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்