ரூ.40 செலவில் பேட்டரியில் இயங்கும் ஜீப்; 280 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்; கீழடியைச் சேர்ந்த இளைஞர் சாதனை

விவசாய தேவைக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை பட்டதாரி இளைஞர் ஒருவர் தயார் செய்துள்ளார். இதில் ரூ.40 செலவில் 280 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம்.

Update: 2022-05-19 11:31 GMT

திருப்புவனம், 

விவசாய தேவைக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை பட்டதாரி இளைஞர் ஒருவர் தயார் செய்துள்ளார். இதில் ரூ.40 செலவில் 280 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம்.

ஜீப்

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங் களால் கார் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் கனவாகவே உள்ளது. இருப்பினும் ஒரு பக்கம் எலக்ட்ரிக்கல் கார்கள் தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திருப்புவனம் அருகே கீழடியைச் சேர்ந்த கவுதம் என்ற மெக்கானிக் பொறியியல் பட்டதாரி இளைஞர் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் டீசல், பெட்ரோலுக்கு மாற்றாகவும், குறிப்பாக விவசாய தேவைக்கு பயன்படுத்தும் வகையில் லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும் ஜீப் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன். அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் படித்து முடித்துவிட்டு சில நாட்கள் வேலையில்லாமல் கம்பி கட்டும் வேலைக்கு சென்றேன். அப்போது தான் வீட்டில் இருந்த படியே ஏதாவது புதுமையாக கண்டுபிடிக்க வேண்டும் என்று சிந்தனை செய்து தற்போது இந்த ஜீப்பை தயாரித்துள்ளேன்.

விவசாய பணிக்கு

இந்த ஜீப் தற்போது விற்கும் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வகையில் பழைய வாகன உதிரி பொருட்களை கொண்டு ரூ.2லட்சத்து 80ஆயிரம் செலவில் உருவாக்கினேன். இந்த ஜீப்பில் லித்தியம் பேட்டரி வாங்கி பயன்படுத்தி உள்ளேன். ஒரு முறை பேட்டரிக்கு முழுஅளவில் சார்ஜ் செய்ய ரூ.40 செலவாகும். இதன் மூலம் 280 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம். மேலும் எவ்வித சத்தமும், புகையும் வெளியே வராததால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுதவிர கிராமப்புறத்தில் அதிகஅளவில் விவசாய பணிகள் நடைபெறுவதால் இந்த ஜீப்பை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரம் மூடைகள் மற்றும் விவசாய பொருட்களை எடுத்து செல்லவும் அதிகஅளவில் பயன் படுத்தப் படுகிறது. இதனால் வாகன போக்கு வரத்திற்காக செலவு செய்யப்படும் டீசல் மிச்சப்படுத்தப் படுகிறது.

இந்த ஜீப்பிற்கு தற்போது பேட்டரிகளை வாடகைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறேன். இன்னும் வரும் காலத்தில் இதே போன்று மோட்டார் சைக்கிளில் பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிளையும் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்