வருத்தம் இல்லை ..ஆனால் ? - லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கருத்து

நேற்று நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது

Update: 2022-05-19 09:30 GMT

 Image Courtesy ; BCCI/IPL 

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன், மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 211 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் அவர் சிக்சர் விளாச போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட 3-வது பந்திலும் சிக்சர் பறந்தது. 4-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5-வது பந்தில் ரிங்கு சிங் கவர்ஸ் திசையில் அடிக்க முயற்சிக்க அந்த பந்தை ஏவின் லீவிஸ் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இறுதி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் போல்டானார்.

இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதோடு லக்னோ அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. இந்த தோல்வியால் கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்ப்பில் இருந்து வெளியேறி உள்ளது

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது ;

"எனக்கு வருத்தம் இல்லை. நான் விளையாடிய கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. எங்கள் அணுகுமுறை இந்த ஆட்டத்தில் மிகச்சிறப்பாக இருந்தது.அவர் (ரிங்கு சிங் )  அற்புதமாக விளையாடினார்,

நாங்கள் சிறப்பாகத் தொடங்கினோம், ஆனால் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்தோம்,ஆடும் லெவனில் அதிகப்படியான மாற்றங்களைச் செய்தோம் என்று உணர்கிறேன்.இவ்வாறு கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்