உடையாளூரில், ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தொடங்கியது. விழாவில் பேசிய சூரியனார்கோவில் ஆதீனம், உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்
1,038-வது சதய விழா
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவர் பிறந்த ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1,038-வது சதய விழா அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது.
பின்னர் நடந்த விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தொடக்கஉரை ஆற்றினார். சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் வரவேற்றார்.
சூரியனார்கோவில் ஆதீனம் பேச்சு
விழாவில், சூரியனார்கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
சைவம், வைணவம், சமணம், பவுத்தம் என 4 சமயங்களையும் தன்னகத்தே கொண்டு நல்லாட்சி புரிந்தவர் ராஜராஜ சோழன். அது மட்டுமல்லாமல், நம்முடைய தஞ்சை தரணியில் ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டி அங்கு ஆகமங்களையும், வேதங்களையும், திருமுறைகளையும், சித்தாந்த சாஸ்திரங்களையும், புராணங்களையும் வழிநடத்த பெரும் உதவி செய்தார். அவருக்கு விழா எடுப்பது மிகவும் சிறப்புக்குரியது.
அரசு முன்வர வேண்டும்
சோழ நாட்டை சோறுடைத்து எனக்கூறுவர். சோறு என்பது அறிவுத்திறன் சார்ந்தது என்கிற பொருளை உள்ளடக்கியதாக ராஜராஜ சோழனின் ஆட்சி இருந்தது. எனவே அவரது சதயவிழாவை அரசு விழாவாக நடத்துவது வரவேற்புக்குரியது.
இதேபோல ராஜராஜ சோழன் பிறந்த மண்ணாகிய உடையாளூரில் மணிமண்டபம் அமைப்பதற்கு பொதுமக்களும், அரசும் முன்வர வேண்டும்.
கோவில்களில் தரிசனம்
எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என்றால், கோவில்களில் தரிசனம் செய்ய வேண்டும். பிறவியிலேயே உயர்ந்த பிறவி மானுட பிறவிதான். எனவே தான் மன்னர்கள் கோவில்களை கட்டி வழிபாட்டு முறையை உருவாக்கினர். அவர்களின் நோக்கம் மனிதன் மா மனிதனாக மாற வேண்டும் என்பது தான்.
இதில் வழிபாடுகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். கோவில் கருவறையில் மட்டும் தான் சமஸ்கிருதம் ஒலிக்கப்படுகிறது. அவை எதற்காக என்றால், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் தான்.
சமஸ்கிருதம்-தமிழ் இருகண்கள்
சமஸ்கிருதமும், தமிழும் நம் இருகண்கள். இதில் மாற்றுக்கருத்து இல்லை. சமஸ்கிருதம் இந்த மண்ணில் தோன்றியது தான். அதை பயன்படுத்துபவர்கள் வீட்டிலும் பேசப்படுவது தமிழ்மொழி தான். வேதங்களை பின்பற்ற கூடியவர்களும் தமிழர்கள் தான்.
எனவே இதில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது. வேறுபாடுகள் இல்லாமல் நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீரமைக்க முன்னோடியாக இருந்து அனைவரும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டிமன்றம்
விழாவில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.
தொடர்ந்து, கருத்தரங்கம், திருமுறைப்பண்ணிசை, நாதசங்கமம், திருமுறை இசை, கவியரங்கம் உள்ளிட்டவை நடந்தது.. இன்று (புதன்கிழமை) காலை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கமம், விருது வழங்கும் விழா, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.