வேறு பெண்ணை மணந்த 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

திண்டிவனம் அருகே வாலிபருடன் காதலி ஓடியதால் வேறு பெண்ணை மணந்த 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-25 17:24 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் குமரேசன்(வயது 26). கொத்தனார். இவரும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும் குமரேசனின் பெற்றோர், அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசினர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாட்டிலும் ஈடுபட்டனர்.

காதலி ஓட்டம்

குமரேசனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த 23-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக இருவீட்டாரும் பத்திரிகை அச்சிட்டு, உறவினர்களுக்கு கொடுத்தனர். திருமண ஏற்பாடுகளும் தடல்புடலாக நடந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி குமரேசன் காதலித்த பெண் வேறொரு வாலிபருடன் ஓடி, திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமரேசனின் பெற்றோர், குறித்த தேதியிலேயே வேறொரு பெண்ணை குமரேசனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

தற்கொலை

அதன்படி உறவினர் பெண்ணை தேர்வு செய்து, அவருக்கும் குமரேசனுக்கும் கடந்த 23-ந்தேதி திருமணம் செய்து வைத்தனர். திருமணமான 3-வது நாளான இன்று குமரேசன் தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வெள்ளிமேடுபேட்டை போலீசார் விரைந்து சென்று குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்