குளியல் அறையில் மின்சாரம் தாக்கி புதுப்பெண் சாவு: திருமணமான 4 மாதங்களில் பரிதாபம்
குளியல் அறைக்கு குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மூர்த்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த ரவி-சுமதி தம்பதியின் மகள் நிவேதா (வயது 20). காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த பிரகலாதன் என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் பிரகலாதன் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு நிவேதா குளிக்க சென்றுள்ளார். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் குளியல் அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் பிரகலாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் குளியல் அறை கதவை தட்டினர். ஆனால் எந்தவொரு சத்தமும் வராததால் கணவர் பிரகலாதன் குளியல் அறையின் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த நிவேதாவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் காங்கயம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் குளியல் அறையில் இருந்த மின்சார ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் நிவேதா இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.