தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை பொது ஏலம் விடாமல் வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும்-மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
அரசு தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை பொது ஏலம் மூலம் ஒதுக்காமல் எங்களுக்கே தர வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை பொது ஏலம் மூலம் ஒதுக்காமல் எங்களுக்கே தர வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஆசிப், செயலாளர் அப்துல் ரகுமான் தலைமையிலான வியாபாரிகள் மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தாவரவியல் பூங்கா சாலையில் 120 குடும்பங்கள் கடந்த 30 வருட காலமாக தள்ளுவண்டிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து பிழைத்து வருகிறோம் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு எங்கள் கடைகளை அகற்றி தருமாறு அதே இடத்தில் 30 நாட்களுக்குள் கடைகளை கட்டி நிரந்தரமாக தருகிறோம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் வாக்குறுதி அளித்ததை நம்பி நாங்கள் மேற்படி கடைகளை அகற்றி கொடுத்தோம். தற்போது அங்கு 55 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
பொது ஏலம்
இந்த நிலையில் தற்போது 55 கடைகளில் 36 கடைகளை மட்டும் வியாபாரிகளுக்கு ஒதுக்கிவிட்டு மீதமுள்ள கடைகளை பொது ஏலம் மூலம் ஒதுக்குவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. மேலும் இதற்கு உடனடியாக ரூ.2 லட்சம் கட்ட உத்தரவிட்டுள்ளனர். கடைகளை பொது ஏலம் மூலம் ஒதுக்குவதால், அங்கு ஏற்கனவே கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே 120 குடும்பங்களில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேற்படி கடைகளை எங்களுக்கே ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து மேலும் மனு கொடுப்பதற்காக ஊட்டி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெண்டர் ஒத்திவைப்பு
இது குறித்து நகராட்சி கமிஷனர் காந்தி ராஜன் கூறுகையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் டெண்டர் அறிவிக்கப்பட்டது. மேலும் பிரச்சனை ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட டெண்டர், தற்போது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்றார்.