புத்தாண்டு கொண்டாட்டம்: கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி,
ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், தொடர் விடுமுறை, ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.