புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி
மயிலாடுதுறையில் ரூ.4.57 கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த தாலுகா அலுவலகத்துக்கு தேவையான இட வசதி இல்லாமல் இருந்தது. இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட ரூ. 4 கோடியே 57 லட்சம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம் கச்சேரி சாலையில் ஒரு தனியார் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய கட்டிட பணியை தொடங்கி வைத்தார். இதில் நகர சபை தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திருமுருகன் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.