கட்டி முடிக்கப்பட்டு காற்று வாங்கும் புதிய கடைகள்
நாகை புதிய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கடைகள் எப்போது திறக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாகை புதிய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கடைகள் எப்போது திறக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆன்மிக சுற்றுலாத்தலம்
நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இதனால் மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தலமாக நாகை மாவட்டம் விளங்குகிறது. இதனால் நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நாகை புதிய பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக இங்கு புதிதாக 16 கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
வரவேற்கத்தக்கது
இது குறித்து நாகையை சேர்ந்த வணிகர்கள் கூறும்போது:-
நாகை புதிய பஸ் நிலையத்தில் வியாபாரத்துக்காக புதிய கடைகள் கட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் கடைகள் கட்டி முடிக்கப்பட்டும் தற்போது வரை டெண்டர் விடப்படவில்லை. ஏன் காலம் தாழ்த்துகிறார்கள் என்று தெரியவில்லை.
எனவே வெறுமனே பூட்டி கிடக்கும் கடைகளை வியாபாரிகளுக்கு கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். பஸ்சை விட்டு இறங்கி வரும் சிலர் கடைகள் பூட்டி கிடப்பதால் அந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
நகர்மன்ற கூட்டத்தில் ஆலோசனை
எனவே நாகை புதிய பஸ் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு காற்று வாங்கிக்கொண்டிருக்கும் கடைகளை வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக திறக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வரும் நகர்மன்ற கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு இந்த கடைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.