சென்னை, சங்கரன்கோவிலில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-08-05 00:13 GMT

சென்னை,

வருவாய்த்துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலக கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் சென்னை வடக்கிலும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலிலும் தலா ரூ.2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் செலவில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

8 தாசில்தார் அலுவலகங்கள்

இதேபோல், கோவை மாவட்டம், ஆனைமலையில் ரூ.4 கோடியே 25 லட்சத்து 53 ஆயிரம் செலவிலும், கள்ளக்குறிச்சியில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், கல்வராயன்மலையில் ரூ.4 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும், நெல்லை மாவட்டம், திசையன்விளையில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் ரூ.2 கோடியே 75 லட்சத்து 24 ஆயிரம் செலவிலும், ஏரலில் ரூ.3 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் செலவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் செலவிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ரூ.2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் செலவிலும் தாசில்தார் அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.30 கோடியே 73 லட்சத்து 62 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் 8 தாசில்தார் அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

சார் கருவூல அலுவலக கட்டிடம்

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரம் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 606 செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலக கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விவசாய டிராக்டர்கள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குவதற்காக வேளாண்மை பொறியியல் துறையால் 22 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 185 டிராக்டர்கள், 185 'ரோட்டவேட்டர்'கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், 'ரோட்டவேட்டர்'கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்து கலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை பொறியியல் துறை தலைமைப்பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்