தொரங்கூரில்புதிய தபால் நிலையம் திறப்பு
தொரங்கூரில் புதிய தபால் நிலையம் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதி ஆரம்பூண்டி ஊராட்சியில் உள்ள தொரங்கூர், கருநெல்லி, கிடார், மனப்பாச்சி, மேலமுருவம், பட்டிவளவு அயத்துறைகாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தொரங்கூர் கிராமத்தில் புதிதாக கிளை தபால் நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார். கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளிமலை ரத்தினம், ஆரம்பூண்டி ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மேற்கு உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுந்தரேசன் வரவேற்றார். மத்திய மண்டல அஞ்சல் தலைவர் நிர்மலாதேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தபால் நிலையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது, தபால் நிலையத்தின் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு பரிசுகளையும், புதியதாக தொடங்கப்பட்ட கணக்குகளுக்கான பாஸ் புத்தகங்களை பயனாளர்களிடம் வழங்கினார். தொடர்ந்து விருத்தாசலம் அஞ்சல் கோட்ட ஊழியர்கள் சர்பில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை தொரங்கர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது. இதில் விருத்தாசலம் கோட்ட ஆய்வாளர்கள், அஞ்சல் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் பசுபதி நன்றி கூறினார்.