ரூ.3¾ கோடியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊராட்சி அலுவலகம்
திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 1967-ம் ஆண்டு அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மூலம் திறக்கப்பட்டது. இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டிடத்தின் தன்மை என்பது நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்து வருகிறது. அதை தொடர்ந்து திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பூமி பூஜை
அதை தொடர்ந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்த அலுவலக கட்டிடம் 17 ஆயிரத்து 300 சதுரஅடி பரப்பளவில் இரண்டு தளமாக அனைத்து நிர்வாக வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றியக்குழு தலைவர் எடுத்து வருகிறார். இதன் காரணமாக இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.