புது மாப்பிள்ளை அடித்துக்கொலை-பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த சோகம்!

செந்தில்குமார் உயிரிழந்தது தெரியாமல் பிரகாஷின் நண்பர்கள் மணிமாறன், ரோஷன் ஆகிய இருவரும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

Update: 2023-02-16 11:26 GMT

சென்னை

செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். 28 வயதேயான இவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை மது அருந்தி கொண்டாடியுள்ளார்.

மதுபோதையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அண்ணாநகர் 2-வது அவென்யூவில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார். அவருடன் வந்த நண்பர்கள் ஓட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, வெளியே உள்ள கடையில் செந்தில்குமார் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த பிரகாஷ் என்பவருடன் செந்தில்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனைப் பார்த்த பிரகாஷின் நண்பர்களான மணிமாறன், ரோஷன், ராஜேஷ் ஆகியோர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்த செந்தில்குமாரின் நண்பர்களும் எதிர் தரப்பினரை தாக்கினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அத்துடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே அவர் உயிரிழந்தார்.

இதனிடையே செந்தில்குமார் உயிரிழந்தது தெரியாமல் பிரகாஷின் நண்பர்கள் மணிமாறன், ரோஷன் ஆகிய இருவரும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அதற்குள் செந்தில்குமார் உயிரிழந்த தகவல் போலீசாருக்குத் தெரியவர மணிமாறன், ரோஷன் இருவரையும் பிடித்து திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போலீஸார் மணிமாறன் மற்றும் ரோஷனை கைது செய்தனர். மேலும், தலைமறைவான பிரகாஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிறந்த நாளுக்கு டிரீட் கொடுக்க சென்ற இடத்தில் திருமணமாகி 6 மாதங்களே ஆன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்